உலக மக்களது உள்ளத்தின் இருள் நீக்கி, வாழ்வின் ஒளிச்சுடராய் மிளிர்வது கல்வியே. இத்தகைய அணையா விளக்காகிய கல்வியைப் பெறுவதற்கு, மாணவர்க்கு மட்டுமன்றி ஆசிரியர்க்கும் தூண்டுகோலாய் விளங்குவது பாடப்புத்தகங்களே. பாடப்புத்தகங்கள் இல்லாத வகுப்பறையை யாரேனும் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
தனியார் பதிப்பகங்கள் மூலம் அச்சிடப்பட்டபோது பாடநூல்கள் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களைச் சென்றடையவில்லை; பாடநூல்களைக் கொண்டு சேர்ப்பதில் ஒழுங்குமுறையும் பின்பற்றப்படவில்லை. மேலும் புத்தகங்களை அதிக விலைக்கு விற்கும் நோக்கத்தில் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டது. பாடநூல்களில் உள்ள பாடப் பொருளில் கருத்தொற்றுமை காணப்படவில்லை.
இத்தகைய குறைபாடுகளைக் களையும் நோக்கத்தோடு, தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், சங்கங்கள் பதிவுச் சட்டம் 1850-ன் கீழ் 1970-ம் ஆண்டு மார்ச் 4 அன்று தன்னாட்சி நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. இந்நிறுவனமானது 1993-ம் ஆண்டு "தமிழ்நாடு பாடநூல் கழகம்" என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க அரசாணை எண்.178 06.09. 2013-ன் படி மீண்டும் "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இக்கழகம் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் குழுவின் கீழ் செயல்பட்டு வருகிறது. திரு.திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக உள்ளார். முனைவர். பொ.சங்கர், இ.ஆ.ப., அவர்கள் தற்போதைய மேலாண்மை இயக்குநராகச் செயலாற்றி வருகிறார்.